வேளாண் மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

வேளாண் மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்ப முயற்சிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
rb udayakumar mkstalin

மதுரை:

இதுதொடர்பாக, மதுரையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால், விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சியின் போது விவசாயிகளை காத்திட முடியும், விலை உயரும் பொழுது குறிப்பிட்டதற்கு மேல் விலை ஏறினால் அந்த லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கும்.
ஆனால் இன்றைக்கு வேளாண் மசோதா நன்மையை ஆராயமல் இந்தத் திட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருவதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்காத தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தைக் கூட்டி ஒரு போலியான கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருப்பது ஒரு தவறான முன் உதாரணம்.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள நிலங்களில் சேற்றில் கால் வைத்து முதல்வர் நடவு நட்ட ராசியால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இருமடங்கு உற்பத்தி அதிகமானது என்று விவசாய மக்கள் மனம் குளிர்ந்து பாராட்டுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தற்பொழுது வேளாண் சட்ட மசோதாவில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிந்தும் ஸ்டாலின் அரசியல் நாடகத்திற்காக விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் குளிர்காய முயற்சிக்கிறார் . அது ஒரு போதும் நடக்காது.
தி.மு.க. மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போதும், தமிழகத்தில் ஆட்சி செய்த போதும் தி.மு.க. விவசாயிகளுக்கு செய்த துரோகத்தை ஒருநாளும் மறக்க முடியாது.

காவேரி, முல்லை பெரியார் போன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தங்கள் சுயநலத்துக்காக தாரை வார்த்தும், விளைநிலங்களை பாதிக்கும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டு துரோகம் செய்ததை விவசாய மக்கள் இன்றும் மறக்க மாட்டார்கள் என்று அவர் பேசினார்.

Exit mobile version