தூத்துக்குடியில், ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு வீச்சில் சிக்கி மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு காவல்துறை சார்பில் ரூ.86 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 18-ஆம் தேதியன்று, துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது¸ ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில், காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே வீர மரணமடைந்தார்.
உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க, மதுரை தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்மூலம் திரட்டப்பட்ட 86,50,000 ரூபாய் தொகையை, தென் மண்டல ஐ.ஜி. எஸ்.முருகன், காவலர் சுப்பிரமணியன் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கினார். அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.