தோட்டத்தில் போலி மது ஆலை.. கள்ளச் சாராயத்தில் சாயம் கலந்து விற்கப்பட்ட குவாட்டர் பாட்டில்கள்

சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து, வீட்டிலேயே போலி மதுபான ஆலை நடத்தி வந்த நபரை போலீசார் கைப்பற்றினர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து உள்ளது இதனை கட்டுப்படும் நோக்கில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் காலனி பகுதியில் நேற்று மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆம்னி காரை மறித்து சோதனையிட்டபோது, அதனுள் 3 கேன்களில் இருந்த கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

தொடர்ந்து, காரை ஓட்டி வந்த சந்திரசேகரன் என்பவரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 53 வயதான அந்த நபர் மணிவிழுந்தான் காலனி வசந்தபுரத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும், புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து, அவற்றில் கலர் சாயம் கலந்து குவாட்டராக தயாரித்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்ததாகவும் அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து சந்திரசேகரை, போலி மது ஆலை இயங்கிய அவரது தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு மேலும் சில கேன்களில் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஏராளமான காலி குவார்ட்டர் பாட்டில்களும், மது கம்பெனி லேபிள்களும், சாராயத்தில் சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட 1,100 போலி குவார்ட்டர் பாட்டில்களும் இருந்தன. பாட்டிலில் மூடியை சரியாக மூட இயந்திரத்தையும் பயன்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 135 லிட்டர் சாராயம், 1,100 போலி மதுபாட்டில், இயந்திரம், 2 ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். பிடிபட்ட சந்திரசேகரின் கூட்டாளிகள் ஆன புதுச்சேரியை சேர்ந்த திரு, பெங்களூருவை சேர்ந்த நிர்மல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version