தர்மத்தை காக்கவும், ஊழலை அழிக்கவும்தான் வேல் யாத்திரை என்று தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரை பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, பாஜகவினர் முருகனை கைவிட்டுவிட்டனர். வேல் என்ற ஆயுதத்தை மட்டும் கையில் எடுத்துள்ளார்கள். வேல் என்பது ஆயுதம். பாஜக வன்முறையில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சி. எனவே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அழகிரியின் கருத்துக்கு தமிழக பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “தமிழ்க்கடவுள் முருகனை தமிழர்கள் தங்களது இதயத்தில் இருத்தி தருமத்தை காக்கும் வேலாயுதத்தை வழிபட்டு வருகின்றனர். அது தருமத்தை நிலைநாட்டும் ஆயுதம் என்பதே உண்மை. எனவேதான் காக்க காக்க கனகவேல் காக்க என்று மனம் உருகி வேண்டுகிறார்கள். அது காங்கிரஸை காக்காது. தவறு செய்பவர்களை காக்காது.
தர்மத்தை காக்கவும், ஊழலை அழிக்கவும்தான் வேல் யாத்திரை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
வேல் வன்முறைக்கான ஆயுதம் என்றால் தவறிழைத்த சூரனை வதம் செய்ததைகூட சரி இல்லை என்ரு அழகிரி சொல்கிறாரா?முருக பக்தர்களை காயப்படுத்திய இந்த செயல் கண்டனத்துக்குரியது. முருக பக்தர்களிடம் காங்கிரஸ் கட்சி, பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்.
ஆக்ஸ்போர்டு அகராதியை எல்லாம் மேற்கோள் காட்டுவதைவிட மக்கள் மனதில் என்ன கருத்து உள்ளது? பாரம்பரியமாக தமிழர்கள் வழிபடும் முருக கடவுளும் அவரது கையில் இருக்கும் வேலாயுதமும் வழிபாட்டுக்குரியது. காங்கிரஸ் தலைவரின் கருத்து முருக வழிபாட்டையே கொச்சைப்படுத்துவதாகும். தமிழர் மரபில் வேல் வழிபாடு என்ற வழிபாடும் உண்டு என்பதை காங்கிரஸ் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை” என்றார் அவர்.