சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம்

தூத்துக்குடியில் சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சரக்கு வாகனம் ஏற்றிக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதவி ஆய்வாளரான பாலு, கொற்கையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முருகவேல் என்ற நபர் போதையில்  தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை உதவி ஆய்வாளரான பாலு  கண்டித்துள்ளார். 

இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலு மீது ஏற்றி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளரை கொன்ற முருகவேலை கைது செய்ய 10  தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கொலை செய்த முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து இருக்கிறார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version