கண்களை திறந்த கானக்குயில்..அந்த நிலையை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ் பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, 2 நாட்களில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி விடுவேன் என நம்பிக்கையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

எஸ்.பி.பி உடல்நிலை மோசமான செய்தி வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலக்கினரும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட, தமிழக அரசு தரப்பில் இருந்தும் அவர் சிகிச்சைக்கு உதவிகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,  கொரோனா சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார். அவர் அவ்வப்போது கண்விழிப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version