வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது நீக்க இன்று சிறப்பு முகாம்கள்… 18 வயது பூர்த்தியானவர்கள் என்ன செய்ய வேண்டும்???

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
Indelible Ink

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ அல்லது நீக்கவோ விரும்புவோருக்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, கடந்த 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறாதவர்களும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என விரும்புவர்களும், இன்றும் (21.11.2020), நாளையும் (22.11.2020) நடைபெறவுள்ள வாக்காளர் சிறப்பு முகாம்களில் பயனடையும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு முகாம்களை அடுத்த மாதமும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை, வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேலும், வரும், 2021 ஜனவரியில் 18 வயது பூர்த்தியாவோரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும், ஏதாவது ஒரு முகவரி சான்று, வயது சான்று மற்றும் அடையாள சான்றின் நகல் ஒன்றும் வைத்து, உரிய படிவங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி சான்று

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், கேஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, தண்ணீர் வரி ரசீது, தொலைபேசி, மின் கட்டணம் அல்லது ரேஷன் அட்டை.

அடையாளசான்று

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், 10-ஆம் வகுப்பு சான்றிதழ், மாணவர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு.

வயது சான்று

8 அல்லது 10-ஆம் வகுப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது கிசான் கார்டு.

Exit mobile version