சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, போதிய பயணிகள் இல்லாததால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. ஆனால், தற்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டு போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கி வருகின்றன. ஏற்கனவே பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட சில வழிதடங்களில் மட்டுமே சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே, இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, டிசம்பர் 1–ஆம் தேதி முதல் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சதாப்தி எக்ஸ்பிரஸ் நவம்பர் 30-ஆம் தேதி வரை தான் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயிலானது செவ்வாய்க் கிழமையை தவிர, வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை எனக்கூறி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.