நடுக்கடலில் அதிர்ச்சி; ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம், தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுந்தீவு அருகே சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து உரிய அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவின் தெற்குப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை இலங்கைக் கடற்படையின் ‘எஸ்.எல்.என்.எஸ். சமுதுரா’ கப்பல் இடைமறித்தது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி, படகிலிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரையும் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கேசன்துறை கொண்டு செல்லப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட்ட படகும் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்களை இலங்கை மீன்வளம் மற்றும் நீரியல் வளங்கள் துறையிடம் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுகள் தலையிடக் கோரிக்கை

இந்தக் கைது நடவடிக்கைக்கு மீனவர் சங்கத் தலைவர் கரால்மார்க்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் மீட்டுத் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக–இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினால் மட்டுமே தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version