7.5% உள் ஒதுக்கீட்டில், முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் : ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% உள் இடஒதுக்கீட்டில் முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது, மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்று வரையில் ஒப்புதல் அளிக்காததால், சட்டம் நிலுவையில் உள்ளது.

இதுக்குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் திரு. பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ‘தமிழக ஆளுநர் – முதலமைச்சர் – மத்திய பா.ஜ.க. அரசு’ ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் – நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதுக்குறித்து, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும், நீட்-ஆல் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், முதலமைச்சர் வேடிக்கை பார்ப்பதும் துரோகம். ஆளுநர்-CM-பாஜக கூட்டணி நீட் விலக்கு மசோதாவை நீர்க்கச் செய்தது போல் இன்றி, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக! என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version