ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எச்சரிக்கை அவசியம் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துளளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :-
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இதில், தமிழக அரசு விழிப்புணர்வோடு இருந்து உச்சநீதிமன்றத்திலும் நீதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-
சென்னை உயர் நீதிமன்றம் ஆலை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என கூறி வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது உயிர் ஈகை செய்து நடத்திய மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதன் மீது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன் வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் :-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 13 பேரின் வீர மரணத்திற்கு கிடைத்த நீதியாக தான் இந்த தீர்ப்பை பார்க்கிறேன். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் :-
மக்களின் உயிரையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப் படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன்:-
மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. ஸ்டெர்லைட் மக்களின் நில, நீர் வளத்தையும், கனிம வளத்தையும் அபகரிக்கும் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தனது வலுவான எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:-
பல லட்ச மக்கள் போராட்டத்தின் வெற்றியாக, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.
த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கதக்கது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசு அவற்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும், மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் :-
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்..