தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி சேகர் : 7-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது – உயர் நீதிமன்றம்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, வரும் 7-ஆம் தேதி வரை, எஸ்.வி. சேகரை கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க.-வின் எஸ்.வி. சேகர், தேசிய கொடியை அவமதிக்கும் விதமாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னைக் கைது செய்யாமல் இருக்கக் கோரி, எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசியக் கொடியை அவமதித்ததற்கு எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கேட்டால், அவரை கைது செய்ய மாட்டோம் எனவும், ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவித்து, எஸ்.வி சேகர் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக பேச மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கில் செப்.7-ஆம் தேதி வரை எஸ்.வி. சேகரை கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version