ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!!

ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்விக்கி ஊழியர்கள்

என்னைச் சந்தித்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும் – அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது, அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். ஊரடங்கு நேரத்திலும் உணவை எடுத்துச் சென்று வழங்கி, வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை ‘ஸ்விக்கி’ நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும் மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்களின் 16 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தையை நடத்திட வேண்டும் என்று முதலமைச்சரோ அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சரோ முயற்சி செய்யாமலும் இருந்தது மிகமிகத் தவறான அணுகுமுறை,தொழிலாளர் விரோத மனப்பான்மை.

முதல்வருக்கு வேண்டுகோள்

மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெறமுடியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆகவே, ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ‘ஸ்விக்கி’ நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version