பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் தமிழகம்..!!

viswa deenadalayan
Viswa deenadalayan

இளம் டேபிள் டென்னிஸ் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வா தீனதயாளன் வடகிழக்கு மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலாயாவில் 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் மேகாலாயாவில் முகாமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து வீரர் விஸ்வா தீனதயாளன் உட்பட 4 பேர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள சென்றனர். அதற்காக அசாமின் கவுகாத்தி நகருக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து மேகாலாயாவின் ஷில்லாங் நகருக்கு கார் மூலம் சென்றனர்.

அவர்கள் சென்ற கார் ரி-போய் என்கிற மாவட்டத்தில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று வந்துள்ளது. அது இரண்டு வாகனங்களும் சாலை வளைவில் திரும்பும்போது லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட விஸ்வா தீனதயாளன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ரமேஷ் சந்தோஷ்குமார் மற்றும் அபினேஷ் கிஷோர்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய உடல் இன்று தமிழகம் கொண்டு வரப்படவுள்ளது.

Exit mobile version