சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள், அரசின் திட்டங்களின் பலன்கள் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. மரபுப்படி ஆளுநரின் உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
மேலும் கடந்த கூட்டத் தொடர்களின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, மற்றும் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் அறிவிக்க உள்ள துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாகவும், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.