கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 80க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை அப்பகுதியில் தேடுதல் பணியும் துரிதமாக நடந்துவருகிறது.
இந்த நிலையில் தான், மூணாறில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.