தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது; அச்சப்பட வேண்டுமா? சுகாதாரத்துறை சொல்வது என்ன?

September 18, 2026 07:12 AM GMT+5:30

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 16,334 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும் தற்போதைய நிலை அசாதாரணமானதோ, அச்சப்பட வேண்டிய அளவிலான பரவலோ அல்ல என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட பாதிப்பு அதிகமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகத்தில் 15,688 டெங்கு பாதிப்புகளும் 13 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13-லிருந்து 9 ஆகக் குறைந்துள்ளது.

அதேநேரத்தில் 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 34,339 பாதிப்புகளும் 13 உயிரிழப்புகளும் பதிவாகியதாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஒப்பீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே தற்போதைய நிலை அசாதாரணமான பரவலைக் காட்டவில்லை என்று துறை விளக்கம் அளித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை முக்கிய காலம்

பருவமழைக் காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதற்காக மாவட்ட அளவில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளின் பாதிப்பின் தீவிரத்தை மதிப்பிட்டு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்குவதற்கான நடைமுறையும் பின்பற்றப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையிலும் அதிகரிக்கும் காய்ச்சல்

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் 3,404 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 4,520 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் 16 வரையிலான காலத்திலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னையில் 3,697 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் மட்டுமின்றி வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அச்சப்பட வேண்டுமா?

தற்போதைய எண்ணிக்கைகளை மட்டும் வைத்து தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டை மீறிப் பரவுவதாகக் கருத வேண்டாம் என்பதே சுகாதாரத்துறையின் விளக்கம். அதேநேரத்தில் அடுத்த சில மாதங்கள் கொசு இனப்பெருக்கத்திற்கு சாதகமான காலம் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version