பெண்களுக்கான வெற்றிப் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது. இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டும் வழங்கப்பட்ட சலுகை, இனி குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரணப் பேருந்துகளிலும் கிடைக்கும்.

முதலமைச்சர் விஜய் சென்னையில் இன்று இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.

எந்தப் பேருந்துகளில் இலவசம்?

மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள், Limited Stop Service எனப்படும் எல்.எஸ்.எஸ். பேருந்துகள் மற்றும் டீலக்ஸ் பேருந்துகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் சாதாரணப் பேருந்துகளிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம். மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளுக்கும் இலவசப் பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சாதாரண நகர மற்றும் நகரப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை தொடரும்.

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இந்த வசதி கிடையாது. குளிர்சாதனப் பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ், படுக்கை வசதியுள்ள பேருந்துகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத பிரீமியம் சேவைகளுக்குப் பயணக் கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பேருந்துகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது.

12,692 பேருந்துகளில் பயணம்

தமிழ்நாட்டின் ஏழு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில், 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தப் பேருந்துகளில் 69 சதவீதமாகும்.

மாநிலம் முழுவதும் நாள்தோறும் இயக்கப்படும் 1,94,649 ஒற்றைப் பயண நடைகளில், 1,65,312 நடைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இடம்பெறும். இது மொத்தப் பயண நடைகளில் 85 சதவீதமாகும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என அரசு மதிப்பிட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டுமா?

இத்திட்டத்தைப் பயன்படுத்துவதற்குத் தனியாக ஆன்லைன் அல்லது நேரடி விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. திட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசுப் பேருந்தில் ஏறி, நடத்துநரிடமிருந்து பூஜ்ஜியக் கட்டணப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வருமான வரம்போ, ஒரு நாளில் மேற்கொள்ளக்கூடிய பயணங்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்போ அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகளில் மட்டுமே இலவசமாகப் பயணிக்க முடியும். பேருந்தின் முகப்பில் இடம்பெறும் ‘வெற்றிப் பயணம்’ அடையாளத்தைப் பார்த்து உறுதி செய்துகொள்வது நல்லது.

இரண்டு மாவட்டங்களில் தாமதம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் இந்த இரு மாவட்டங்களில் விரிவாக்கப்பட்ட திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வராது. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்ட பிறகு திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மாதச் செலவு குறையும்

கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால், ஒரு பெண் சராசரியாக மாதத்திற்கு ரூ.888 வரை சேமிப்பதாக தமிழ்நாடு அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய திட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 50 லட்சம் பெண்கள் பயணித்த நிலையில், விரிவாக்கத்திற்குப் பிறகு பயனாளர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பெண்களின் பயணச் செலவைக் குறைத்து, அவர்களின் சமூக–பொருளாதாரப் பங்கேற்பை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கம். பெண்களுக்கான இலவசப் பயணம் தொடர்பான அடிப்படை விவரங்களை தமிழ்நாடு சமூக நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Exit mobile version