ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ஆலையை மூடி தமிழைக அரசு சீல் வைத்தது.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு நேற்று தீர்ப்பு அளித்தது.
இதுதொடர்பாக பேசியிருந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு விவரங்களை முழுமையாக அறிந்த பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வேதாந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தால், அதில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
