ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி.. பறிபோகும் உயிர்கள்..பறக்கும் நோட்டீஸ்..ஆன்லைன் ரம்மிக்கு தமிழகத்தில் தடை?

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்க, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளது.

அதிகரித்துள்ள ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் புதுவை, ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்திலும் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. பொழுதுபோக்கிற்காக ஆடத் தொடங்கி, லட்ச கணக்கில் பணத்தை இழக்கும் மக்கள் அச்சத்தில் தற்கொலை செய்துள்ளனர். சமீபத்தில், கோவையை சேர்ந்த இரு இளைஞர்களும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதை தடை செய்ய தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாகவும், ஆன்லைன் ரம்மியால் இந்திய அளவில் ஆண்டிற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளது.

இதனிடையே, ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில்,  ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர் என்று கூறிய நீதிபதிகள், பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.

Exit mobile version