டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழலில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கும் நியமிப்பது, அவர்களுக்கு பணிச்சுமை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம் எனவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version