மூடநம்பிக்கையால் பெற்ற மகளுக்கே எமனான தந்தை…

காய்ச்சல் பாதித்த மகளுக்கு பேய் பிடித்ததாக எண்ணி சாமியாரிடம் அழைத்துச் சென்ற தந்தையால் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி இறந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன் வீரசெல்வத்தின் வீட்டிலிருந்த ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவை அடுத்தடுத்து இறந்திருக்கின்றன. அதற்கு தற்கொலை செய்து இறந்துபோன அவரது மனைவி கவிதாவின் ஆவிதான் காரணம் என சிலர் வீர செல்வத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மகள் தாரணிக்கும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வீரசெல்வம் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், திருப்பாலைக்குடி அருகேயுள்ள சாமியாரிடமும் அதனை அடுத்து வாணி என்ற கிராமத்திலுள்ள பெண் பூசாரியிடமும் தாரணியை அழைத்துச் சென்றுள்ளார். பெண் பூசாரி பேய் ஓட்டுகிறேன் பேர்வழி என காய்ச்சலில் தவித்த தாரணியை சாட்டையால் அடித்தார் என்று கூறப்படுகிறது. இதில் மயங்கிச் சரிந்த தாரணியின் மூக்கில் மிளகாய் வற்றலை சுட்டு ஆவியைக் காட்டியதாகவும் அதன் பிறகும் மயக்கம் தெளியாத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருந்து, மாத்திரைகளை கொடுத்துள்ளனர். ஆனால் மீண்டும் ஒருமுறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்துச் சென்றால் சரியாகி விடும் என வீரசெல்வம் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அன்று இரவே, தாரணிக்கு காய்ச்சல் உச்சத்தை தொட்டிருக்கிறது. உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரசெல்வம், அவரது மகன், பேய் ஓட்டிய இரண்டு கோடங்கிகள் என அத்தனை பேரிடமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Exit mobile version