அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கு : மனுவுக்கு பதிலளிக்க கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மனுவுக்கு பதிலளிக்க கோரி கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டு முதல், இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரி, தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

அதில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 400 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும்,
இந்த பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் அரசு பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்பதால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவ,மாணவிக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது பாரபட்சமானது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் படிப்பதால், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ,பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை உயர் நீதிமன்றம் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Exit mobile version