மீண்டும் விளக்கம் கேட்கும் தேசிய மனித உரிமை ஆணையம்!
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆறு தலைமுறைகளாக பணிபுரிந்து கொண்டு, வசித்து வரும் மக்களை புலிகள் காப்பகம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைத் தடுக்கக் கோரியும், அவர்களை எக்காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது, அவர்களுக்கான குடிநீர், உணவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது, கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர உத்தரவிட்டதோடு, அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித அறிக்கையும் சமர்பிக்கவில்லை. இதனால் தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு இன்று (19.05.2025) மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக மாஞ்சோலை மக்களின் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
