கேரளாவிலிருந்து கோழி, வாத்து, முட்டைகள் கொண்டு வர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரிமாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச் சாவடிகள் அனைத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்கள் மூலம் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழகத்துக்குள் நுழைய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
Read more – திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி : தமிழக அரசு உத்தரவு
நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால் பறவைக்காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. மேலும், இப்பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.