ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது:தமிழக அரசு திட்டவட்டமான அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை அமைத்த வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. ஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தடை தொடரும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல், ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி கோருவதற்கு கூட அந்நிறுவனத்துக்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version