வரும் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை :
தமிழகம் முழுவதும் கடந்த 3 மாத காலமாக தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்ற வேளையில், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் யாரும் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசமும் அணியாமல் இருந்ததால் தீடிரென கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. இந்தநிலையில், கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்தியும் சமூக ஊடங்களில் பரவியது.
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,
- தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் திருவிழா மற்றும் மதப்பிரச்சார கூட்டங்களுக்கு தடை.
- திருமண நிகழ்வுகளில் 100 பேர், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதி.
- தியேட்டர்களில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 % பேருக்கு மட்டுமே அனுமதி.
- கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.
- வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் மீண்டும் நடைமுறை.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி
- சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.
- பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. நின்று கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- ஆட்டோ மற்றும் பொது வாகனங்களில் 3 பேர்களுக்கு மட்டுமே அனுமதி
- பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி
- கோயம்பேடு உள்பட அனைத்து பெரிய காய்கறி சந்தைகளிலும் சில்லறை வியாபார கடைகளுக்குத் தடை
என்ற அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.