மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முளைத்த நெற்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்துவிட்டது. இந்த இழப்பு அதிர்ச்சியளிக்கிறது. காவிரிப் பாசன மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் போதிலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக காப்பீடு செய்யாத பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? எனத் தெரியவில்லை. பயிர்க் காப்பீடு செய்ய முடியாதது விவசாயிகளின் தவறு இல்லை.
இழப்பீடு
அதேபோல், முளைத்துப் போன நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதற்கு முன்னுதாரணம் எதுவும் உள்ளதா? என்பது தெரியவில்லை. ஆனால், மழை – வெள்ளத்தால் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டதும், அதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டதும் உண்மை. அதை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு ஆராய வேண்டும். முளைவிட்ட நெல் மூட்டைகளில் பாதிக்கப்படாமல் உள்ள நெல்லைப் பிரித்தெடுத்து, அவற்றை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். முளைவிட்டு சேதமடைந்த நெல்லைக் கணக்கிட்டு அதற்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தார்ப்பாலின்
நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் தடுக்க அவை தார்பாலின்கள் கொண்டு மூடவேண்டும். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.