தன்னை போல் இல்லை என்று கூறி தந்தையே பச்சிளங்குழந்தையை அடித்துக் கொன்ற நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் காக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ் சிவரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்த்த தந்தை ராஜிவ், தன்னுடைய சாயலில் இல்லை என்று கூறி கோபித்து சென்றுள்ளார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆகிய சிவரஞ்சனி தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ராஜிவ், மன்னிப்பு கேட்பதை போல நடித்து மனைவியுடன் தங்கியுள்ளார்.
பின்னர் சிவரஞ்சனி தூங்கும்போது குழந்தையின் தொப்புள்கொடியை பிடித்து தரையில் அடித்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். படுகாயமடைந்த குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிவரஞ்சனி ராஜிவ் மீது ஒரத்துர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராஜிவ் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.