தமிழ்நாட்டில் உயிரை மாய்த்துக் கொள்ள சிலரால் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15-16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. விபத்துகளினால் 11-12 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்படுகின்றன. தற்கொலை மரணங்கள்தான் அதிகளவில் உள்ளது. அதில் 10-15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சாணி பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அண்மையில் திருமங்கலத்திலுள்ள மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கே மூன்று பேர் சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருவதை பார்த்தேன்.
முந்தைய காலத்தில் வீட்டிற்கு முன்பு சாணி மொழுகுவது என்பது சுகாதாரமான மற்றும் விஷ கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஒன்றாக இருந்து வந்தது. தற்போது வணிகரீதியில் சாணிபவுடர் விஷமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,” தற்கொலைக்கு இன்னும் சில காரணிகளாக இருக்கக் கூடிய பால் டாயில், எலி மருந்து போன்றவற்றை கடைகளில் விற்பவர்கள் அதை ஒரு லாக்கரில் வைத்து பாதுகாப்பான இடங்களில் வைத்து விற்பனை செய்வதை முன்னெடுக்க வேண்டும். வெளிப்படையாய் தெரியும்படி விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவுறுத்தலையும், அதை வாங்க வருபவர்கள் தனி ஒருவராக வந்தால் தரக் கூடாது என்றும், இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வந்து வாங்கினால் மட்டுமே எலி மருந்து, பால் டாயில் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தக் கூடிய அரசாணைகளை துறையின் அலுவலர்கள் மூலம் அளிக்க இருக்கிறோம். அதோடு தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தற்கொலை மரணங்களை பெருமளவில் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று பேசினார்.




