புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்துக் கட்சியினருடனும் ஆலோசிக்க வேண்டும் முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்

ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

என்னைப் போலவே பல்வேறு கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகத் தமது கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். அவை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தமது வரைவு அறிக்கையில் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் மீண்டும் அதே அறிக்கையை இப்பொழுது நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்காமல், மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் நடைமுறைப்படுத்த முற்படுவது முழுக்க முழுக்க மக்கள் விரோதச் செயல்.

இந்த கல்விக் கொள்கையில் அனைவருக்கும் கல்வி வழங்குவது பற்றி எந்தவித குறிப்பான திட்டமும் இல்லை. மூன்றாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு வைத்து ஏற்கெனவே படிப்பவர்களையும் இடை நிறுத்தம் செய்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள்.

உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. மருத்துவப் படிப்பைப் போலவே எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது பெரும்பாலானவர்களை உயர் கல்வி பெறாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சூழ்ச்சி. தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல்வரை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version