இந்த காலத்தில் சாதிய வன்கொடுமையை ஏற்கவே முடியாது:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்த காலத்தில் சாதிய வன்கொடுமையை ஏற்கவே முடியாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி:

சாதிய வன்கொடுமை :

தூத்துக்குடி, கயத்தாறு அருகே ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆடு, தனது பட்டியில் மேய்ந்ததற்காக அவரை காலில் விழ வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 7 பேர் மீது கயத்தாறு போலீஸார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பால்ராஜின் குடும்பத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்:

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கயத்தாறு ஓலைக்குளம் கிராமத்தில் பால்ராஜ் என்பவர் ஆடு மேய்க்கும் போது வன்கொடுமை சம்பவம் நடந்தது. இது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை கவனத்துக்கு வந்தது.

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கவே முடியாது
பால்ராஜிக்கு வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடைபெற கூடாது என்று தான் நான் நேரில் வந்து பேசினேன். நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தார்.
இந்தக் காலத்தில் வன்கொடுமை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தீண்டாமை, வன்கொடுமை செய்தால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version