எஸ்.வி. சேகர் பேசுவாரு அப்புறம் போய் ஒளிஞ்சிக்குவாரு – முதலமைச்சர் கிண்டல்

எஸ்.வி. சேகர் ஏதாச்சும் பேசுவார், பின்பு சென்று ஒளிந்துகொள்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டும் என்றால் அக்கட்சியின் கொடியிலும், பெயரிலும் அண்ணாவும், பெரியாரும் நீக்கப்பட வேண்டும் என எஸ்.வி.சேகர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் . இதற்கு, அதிரடியாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மானம் மற்றும் ரோஷம் இருந்தால் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து பெற்ற சம்பளத்தையும், பணத்தையும் எஸ்.வி.சேகர் திரும்பத் தர வேண்டும். விளம்பரத்திற்காக பேச கூடாது என தெரிவித்து இருந்தார். இதற்கு எஸ்.வி.சேகர் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திண்டுக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும்,
திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கல்லில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் அதில் மாற்றமில்லை எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்ந்து எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு பதிலளித்த முதலமைச்சர், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் பிறகு வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? அவர் முதலில் எந்த கட்சி? என்றும், பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

.

Exit mobile version