கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை…

புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சப் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Kodaikanal

நிவர் புயலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் புரெவி புயல் உருவானது. இந்தப் புயல் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயல் இன்று மாலை அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பலத்தக் காற்று வீசி வருவதால் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து குடிநீராதாரங்களும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக் கருதி சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொட‌ர்ந்து புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பேருந்துகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாகனங்கள் உட்பட அனைத்து வாக‌னப்‌ போக்குவர‌த்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வத்தலகுண்டு, பழனி, அடுக்கம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது எனவும், பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும், அரசு சொல்லும் நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : வன மரபியல் நிறுவனத்தில் 30,000 சம்பளத்தில் வேலை…

Exit mobile version