10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களிடம் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : மின்சார பேருந்து போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா பரவல் காரணமாக மட்டுமே கடந்த மாதங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது மத்திய அரசு ‘பார்ம்-2’ அடிப்படையில் கொண்டுவந்ததால் மின்சார பேருந்துகளுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது.அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்து போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பஸ்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் வருகின்ற 2021 ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும், 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.