தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்திருந்தனர்.
தடையில்லா சான்றிதழ்:
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பயன்பாடு:
அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாகவும், மீதமுள்ள 367 நிறுவங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத நிறுவனங்கள்:
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை என்றும், உடனடியாக மூட உத்தரவிடலாம் என உத்தரவிட்டனர்.
நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளைவை கணக்கிடும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
கடும் நடவடிக்கை:
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உரிமம் பெறாமலும் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.