மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் – குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளில், தேர்ச்சிப் பெற்ற மதுரைப் பெண் மற்றும் சென்னை வாலிபரின் வெற்றி அனைவருக்கும் முன்னுதாரணம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் தேசிய அளவில் ஏழாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 44 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

2019-ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம்  மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பூரணசுந்தரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப பூரணசுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விடாமுயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும், “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டும்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version