மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீட்டிற்கான குழுவில் உமாநாத்தை நியமித்தது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி

முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்குவது தொடர்பான குழுவில், சுகாதாரத்துறை செயலாளரை நியமிக்காமல், அரசு நிறுவன மேலாண்மை இயக்குனர் உமாநாத்தை நியமித்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியிடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதை வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய, மூன்று மாதங்களுக்குள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, குழுவில் இடம்பெறுவதற்கான உறுப்பினர்களின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியது. இந்நிலையில் அ.தி.மு.க.வின் தலைமை செயலாளர், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரின் பெயரைப் பரிந்துரை செய்யாமல், அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள உமாநாத்தை, தமிழக அரசின் சார்பில் கடந்த 14-ஆம் தேதி கடிதம் மூலமாகப் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், அதேநாளில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தடை விதிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்படும் 4 நபர் குழுவிற்கான உறுப்பினர் பெயரைப் பரிந்துரை செய்து தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பிய பின்பு, அதே நாளில் மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளர் மூலமாக உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தடை கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுகொள்ள உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம். ஏன் இந்த இரட்டை வேடம்?

மக்கள்நல்வாழ்வுத் துறைச் செயலாளர் நியமிக்காமல், அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள உமாநாத் ஏன் நியமிக்கப்பட்டார்? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டுக்கான அடிப்படை என்ன? என்பது குறித்த விளக்கத்தை முதலமைச்சர் உடனடியாக தமிழக மக்களுக்கு அளித்திட வேண்டும். உயர்நீதிமன்றம் அளித்த 50 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையை உடனே பெற அ.தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version