தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரனை பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண் சுவரின் மீது சாய்ந்து நின்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பீர்க்கங்கரணை பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் இன்று காலை அவரது வீட்டு சுவரின் மீது சாய்ந்துக் கொண்டு நின்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கௌசல்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுவரில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மழை நேரத்தில் கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள், குழந்தைகளை வெளியே விளையாடவோ அல்லது கடைகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.