தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர். அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
Read more – எங்கள் ஆட்சியில் மரங்களை வெட்டுபவர் மீது சட்டம் பாயும்…. ட்விட்டரில் சீமான் கருத்து..
இந்தநிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ம் தொடங்கி 19 ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கு 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்று மாலையே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்தலை ஆணையம் தெரிவித்துள்ளது.