தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் : தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா உறுதி

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா உறுதியளித்துள்ளார்.

சென்னை :

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் தொடங்கி உள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்கவும், அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் இந்திய தேர்தல் கமி‌ஷன் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இந்த குழுவில் தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

 இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா கூறியதாவது:-

கொரோனா அச்சுறுத்தலுக்கு ஏற்ப தேர்தல் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொரோனா வழிமுறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வர இயலவில்லை என்றால் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும் வாக்குச்சாவடிகளில் சானிடைசர் வழங்கப்படும், வாக்காளர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும்.தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவது தான் வழக்கம். வாக்குக்கு பணம், மது, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

Read more – வருகிற 27ந்தேதி முதல் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது : பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவிப்பு

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது முடிவு செய்ய இயலாது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு படை அதிகம் அமைக்கப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

Exit mobile version