உங்களுக்கு கொடுப்பதற்கு என் உயிரை தவிர வேற எதுவும் இல்லை என்று சுயேட்சையாக களமிறங்கும் இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர். மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் ஆங்காங்கே வித்தியாசமான வாக்குறுதிகளை வழங்கி மக்களை கவர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும், தமிழ் பேரரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் போட்டியிடுகிறார். இவர் தற்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது கௌதமன் கூறியதாவது ;
என்னை உங்களுக்கு இயக்குனராக மட்டுமே தான் தெரியும். நான் ஒரு போராளி, இந்த மண்ணிற்காக போராடி வருகிறேன், ஜல்லிக்கட்டுக்காக நான் போராடியதை நீங்கள் அறிவீர்கள், என்னிடம் கொடுப்பதற்கு உயிரைத்தவிர வேறு ஏதும் இல்லை. பிற அரசியல்வாதிகளை போல் ஓட்டிற்கு பணம் கொடுக்க என்னால் இயலாது, அதற்கான பணமும் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.
Read more – மேற்குவங்கம், அசாமில் தொடங்கிய முதற்கட்ட வாக்குபதிவு : ஒரு மையத்திற்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி
மேலும், என்னை நீங்கள் வெற்றி பெற செய்தால், இந்த மண்ணை காப்பாற்றுவதற்காக நிச்சயம் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவே எனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்கு சேகரித்தார்.