சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் : கடம்பூர் ராஜு சவால்

சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாருக்கு வெற்றி என்று தமிழகமே உற்றுநோக்கி வருகிறது.

இந்தநிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு அன்னை தெரசா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது; டிடிவி தினகரனின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா தொடந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக கூறி என் மீது உள்ள நன்மதிப்பை கெடுக்க நினைக்கிறார்.

எனது சொத்து மதிப்பு குறித்து நான் ஏற்கனவே வேட்புமனுவில் தாக்கல் செய்து விட்டேன். நான் இதுவரை சிங்கப்பூர் சென்றதே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன். அவர் கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்று தெரிவித்தார்.

Read more – நான் வெற்றி பெற்றால் நிலவுக்கு பயணம்.. வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்.. வாக்குறுதியை வாரிவழங்கிய மதுரை சுயேட்சை வேட்பாளர்

மேலும், டிடிவி தினகரனை நம்பி ஓட்டு போட்டால் நீங்கள் தான் ஒரு கையெழுத்து வாங்க, சிங்கப்பூர் செல்லவேண்டும். ஏனென்றால் சிங்கப்பூரில் அவருக்கு தான் குடியுரிமை இருப்பதாக கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version