வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையெனில் வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம் உறுதி

வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையெனில் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பல திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்கு அளித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது இன்று இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரம் பழுது காரணமாக இன்னும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்களிப்பதற்காக செல்பவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – ஜனநாயக கடமையாற்றிய அரசியல் தலைவர்கள்…

அவ்வாறு இல்லாதவர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்ற இந்திய அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட எதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து ஓட்டு ஸ்லிப் பெற்று வாக்களித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version