முதலமைச்சர் அறிவித்தது பொங்கல் பரிசுத் தொகையா வாக்காளர்களுக்கு முன்பணமா திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:
புயல்-மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்ன ஆனது? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ள அவர் இது தொடர்பாக உரிய விளக்கம் தருமாறு முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முதலமைச்சர்க்கு கேள்வி அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500/- வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா? வெளிப்படையான விதிமீறலாகும்.
புயலாலும் மழை வெள்ளத்தாலும் பாதிப்புக்கு ஆளாகி இலட்சக் கணக்கான மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் வேலையாகும். புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
Read more – வங்காளத்தை தங்கம் போன்று மாற்றுகிறோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் ரூபாயும் மற்ற பகுதிகளில் வாழ்வோர் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவேண்டும். தமிழக அரசு தனது கூட்டாளியான பாஜக அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தரவேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.