புதிய தரவு மையம்: முதலமைச்சர் விஜய் – சிங்கப்பூர் துணைப் பிரதமர் திறந்து வைப்பு!

சென்னை: அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டாலேண்ட் நிறுவனம் அமைத்துள்ள புதிய தரவு மையத்தை முதலமைச்சர் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இன்று (அக்டோபர் 15) திறந்து வைத்தனர்.

‘கேபிட்டாலேண்ட் டேட்டா சென்டர் சென்னை 01’ என்ற பெயரில் அமைந்துள்ள இந்த மையத்தைத் திறந்து வைத்த இருவரும், அதன் உள்கட்டமைப்பு வசதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

நான்கு ஏக்கரில் தரவு மையம்

அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் இந்தத் தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் சேமிப்பு, கிளவுட் சேவைகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு–சிங்கப்பூர் தொழில் உறவு

விழாவில் பேசிய கேபிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி கௌரிசங்கர் நாகபூஷணம், தமிழ்நாட்டுடன் நிறுவனத்துக்கு சுமார் 22 ஆண்டுகாலத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார். புதிய தரவு மையம் தமிழ்நாடு–சிங்கப்பூர் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தரமணியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் தமிழ்நாட்டில் தனது செயல்பாட்டைத் தொடங்கிய கேபிட்டாலேண்ட், தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழிற்துறை மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்புத் துறைகளிலும் செயல்பட்டு வருகிறது.

Exit mobile version