இறந்துபோன மனைவியை விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக சந்தித்த கணவன் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொழில்நுட்பத்தின் துணையினால் தென்கொரியாவில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டில் வசித்து வரும் கிம் ஜாங்-சூ, விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் மனைவியை சந்தித்துள்ளார். தொழில்நுட்பத்தின் துணையோடு உயிர்நீத்த தன் மனைவியின் கரங்களையும் அவர் பற்றியுள்ளார்.
அந்த நாட்டின் தொலைகாட்சி ஒன்றில் ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக உயிர்நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக வழி செய்கிறது. அந்த ஆவணப்படத்தின் துணையுடன், நாள்பட்ட நோயினால் உயிர்நீத்த தன் மனைவியை சந்தித்துள்ளார் கிம் ஜாங்-சூ. அவரை பார்த்ததும் அவரது கண்களில் நீர் ததும்பியுள்ளது. அவரது உருக்கம் அந்த ஆவணப்படத்தை பார்த்த எல்லோரது மனதையும் உருக செய்துள்ளது.
சுமார் ஆறு மாத காலம் இந்த ஆவணப்படத்தை தயாரிக்க தேவைப்பட்டதாக சொல்கிறது படக்குழு. அந்த ஆவணப்படத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் துணையோடு கிம் நடனமும் தன் மனைவியுடன் ஆடியுள்ளார். “அப்பா எப்போதுமே அம்மாவுக்கு தன் அன்பை முத்தங்கள் மூலமாக வெளிப்படுத்துவார். அம்மா நோய் பாதிப்புக்கு ஆளான போதும் அம்மாவை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். அம்மாவின் முடியெல்லாம் கொட்டிய போதும் கூட ‘அழகி’ என சொல்வார் அப்பா” என்கிறார் இரண்டாவது மகள் ஜாங்-யன். இந்த வீடியோ யூடியூப் தளத்தில் மட்டுமே 8 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது.