மருத்துவம் முதல் திறன் மேம்பாடு வரை செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; முன்னோடி திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை
பொதுமக்களுக்கான அரசு சேவைகளை மேம்படுத்த Voice AI எனப்படும் குரல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து கர்நாடக அரசு ஆராய்ந்து வருகிறது.
திறன் மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு, மருத்துவம், கலாசாரம் மற்றும் பொதுமக்களுக்கான அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் Voice AI முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, Voice AI நிறுவனமான ElevenLabs குழுவினர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனையில் இதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டன.
இந்திய மொழிகளில் வேலைவாய்ப்பு நேர்காணலுக்குத் தயாராவோருக்கு குரல் வழியாக உதவுவது, முதலீட்டாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பேச்சுத் திறனை இழந்தவர்களுக்கு தகவல் தொடர்பில் உதவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் AI மூலம் உருவாக்கப்படும் போலிக் குரல்கள், தவறான தகவல்கள் மற்றும் Deepfake அபாயங்களை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நேரடியான பயனை ஏற்படுத்தக்கூடிய திட்டத்தை முதலில் முன்னோடி அடிப்படையில் செயல்படுத்துவதற்கான தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
