ஏமாற்றிய ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ்… ₹19,47,500 தர நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

இறப்பு காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ₹19 லட்சத்து ₹47 ஆயிரம் காப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் எடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பாக ஜெயக்குமார் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கான இறப்பு காப்பீடு செய்திருந்தார். அதனால், அவர் இறந்த பிறகு காப்பீடு தொகை கேட்டு அவரது மனைவி தேன்மொழி விண்ணப்பித்திருந்தார். பல பொய்யான காரணங்களை கூறி இழப்பீடு தாராமல் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அவரது மனைவியை திருப்பி அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது மனைவி தேன்மொழி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, இறப்பு காப்பீடு தராமல் ஏமாற்றிய ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ₹18 லட்சத்து ₹37,500 கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ₹1 லட்சம் இழப்பீடு & வழக்கிற்குண்டான செலவு ₹10,000யும் சேர்த்து மொத்தமாக ₹19,47,500 கொடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

Exit mobile version