தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் 2020-2021ம் ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் ₹69.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 555 ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் கடலூர் மாவட்டத்தில் 1,812 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ₹2.55 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விரும்பும் விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் பதிவு செய்யலாம். முன்னுரிமை பதிவேடு அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மானியம் வழங்கப்படும்.ஒரு ஹெக்டர் உளுந்து, எள், தானிய வகை பயிர்களுக்கு ₹13,400 மானியமாகவும், மணிலாவிற்கு ₹22,800 மானியமாகவும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டர் வரை தரிசு நில மேம்பாட்டுத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.